அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அண்டைநாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ தவிர சீனா உடன் வர்த்தக மோதலில் ஈடுபட்டுள்ளார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று பிப்ரவரி மாதம் டிரம்ப் அறிவித்தார்.

இதையடுத்து கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்த மாதம் முதல் 25% வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து தங்கள் நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தி கனடா உத்தரவிட்டது.

கனடாவின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த டிரம்ப் கனடா பொருட்கள் மீதான வரியை மேலும் உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா தொடங்கியுள்ள இந்த வர்த்தக போரில் இருந்து கனடா பின்வாங்காது என்று கூறியுள்ளார்.

மேலும், கனடியர்கள் நியாயம் மற்றும் கண்ணியமிக்கவர்கள். சொந்த நாட்டின் நல்லிணக்கம் ஆபத்தில் இருக்கும் போது சண்டையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

கனடா மீதான வரி விதிப்பு நடவடிக்கையை “வர்த்தக போர்” என்று குறிப்பிட்டுள்ள ட்ரூடோ இதனால் அமெரிக்க குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.