மாணவர்களுக்கான விரைவு விசா வழங்கும் (Student Direct Stream – SDS) நடைமுறையை உடனடியாக நிறுத்துவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் 8 ஆம் தேதி மதியம் 2:00 மணி ((Eastern Time – ET) அதாவது இந்திய நேரப்படி (IST) காலை 12:30 மணிக்குள் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் SDS திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா IRCC ஆல் 2018 இல் தொடங்கப்பட்டது, மாணவர் நேரடி ஸ்ட்ரீம் SDS நடைமுறை இந்தியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் மொழிப் புலமை உள்ள தகுதியுடைய மாணவர்கள் இந்திய மதிப்பில் 12,58,735 ரூபாய்க்கான கனேடிய உத்தரவாத முதலீட்டுச் சான்றிதழை வழங்கி இந்த SDS சேவையின் மூலம் ஒரு சில வாரங்களிலேயே விசா பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது இந்த நடைமுறை விலகிக்கொள்ளப்பட்டுள்ளதால் வழக்கமான நடைமுறையில் மாணவர்கள் விசா பெறுவதற்கு சுமார் 8 வாரங்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கனடா சென்று தங்கள் கல்வியைத் தொடர விரும்பும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.
கனடா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்கள் மற்றும் இந்தியா – கனடா இடையிலான உறவில் விரிசல் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கான விரைவு விசா சேவையை கனடா அரசு திடீரென நிறுத்தி வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.