யூபெக், கனடா
கனடா நாட்டின் யுபெக் மாநில மருத்துவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு தேவை இல்லை என அறிவித்துள்ளனர்.
கனடா நாட்டில் உள்ளது யுபெக் மாநிலம். இங்குள்ள மருத்துவ மனைகளில் பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர் போன்றவர்களின் ஊதியத்தை சமீபத்தில் கனடாவின் மருத்துவ அமைப்பு உயர்த்தியது. ஊதிய உயர்வு போதாது என உலகெங்கும் உள்ள ஊழியர்கள் கூறும் வேளையில் கனடா நாட்டு மருத்துவர்கள் இந்த ஊதிய உயர்வை தேவை இல்லை என மறுத்துள்ளனர்.
யுபெக் மாநில மருத்துவர்கள் சங்கம், “மத்திய சுகாதார அமைச்சகம் மருத்துவமனைகளுக்கு தரவேண்டிய நிதியை குறைத்துள்ளது. இதனால் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கடும் சிரமம் ஏற்பாட்டுள்ளது. அந்த வசதிகளை ஏற்படுத்தாமல் எங்களுக்கு ஊதிய உயர்வை அரசு அளித்துள்ளது. இது தேவையற்ற ஒன்றாகும்.
ஏற்கனவே போதுமான அளவு ஊதியம் பெறும் எங்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதை விட மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை அளிக்கலாம். அத்துடன் தற்போது குறைந்த அளவு ஊதியம் பெறும் கடைநிலை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கலாம்.
நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் எதுவுமே இல்லாத நிலையில் இப்படி ஒரு ஊதிய உயர்வு தேவை இல்லை. அதனால் நாங்கள் இந்த ஊதிய உயர்வு தேவை இல்லை என திருப்பி அளிக்கிறோம். இதைக் கொண்டு மருத்துவ உபகரணங்கள் வாங்கலாம்.” என தெரிவித்துள்ளது.