டில்லி:

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப் பட்டுள்ள நிலையில், காவலை எதிர்த்து அவர் தாக்கல் செய்துள்ள முனு இன்று  டில்லி உயர்நீதி மன்றத்தில்  விசாரணைக்கு வருகிறது. இதில் அவருக்கு ஜாமின் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதுபோல, உச்சநீதி மன்றத்தில் அவர்தாக்கல் செய்துள்ள அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான முன்ஜாமின் மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது. இதன் காரணமாக தலைநகரம் பரபரப்பாகி உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின்  முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டத்தை தொடர்ந்து, அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 5 நாட்கள் சி.பி.ஐ காவலில் வைக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், டில்லி உயர்நீதி மன்றத்தில், தன் மீது பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை நீக்கக்கோரி ஒரு மனு வும்,  சி.பி.ஐ விசாரணையை எதிர்த்தும்,  ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் விவகாரத்தில் முன் ஜாமீன் என மூன்று முக்கிய மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.

அதேவேளையில், உச்சநீதி மன்றத்தில் அமலாக்கத்துறையின் கைது எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள  ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் விவாகரத்தில், அமலாக்கத்துறை தங்கள் தரப்பு விவாதங்களை முன் வைக்க உள்ளது. ப.சிதம்பரம் மற்றும் அவருடைய சொந்தங்களுக்கு அர்ஜெண்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், ஃப்ரான்ஸ், க்ரீஸ், மலேசியா, மோனாக்கோ, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, ஸ்பெய்ன் மற்றும் இலங்கை என பல நாடுகளில் சொத்துகள் இருப்பதை விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே  கடந்த 23ம் தேதி நடைபெற்ற விவாதத்தின் போது, அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தின் நெருங்கிய உறவினர்கள், மோசடி செய்யப்பட்ட பணத்தை வைத்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நிறுவனங்களை துவங்கி நடத்தி வருகின்றனர். அது குறித்த விரிவான விசாரணையை சி.பி.ஐ மேற்கொண்டு வருகிறது” என அமலாக்கத்துறை அறிவித்தது. அதைத்தொடர்ந்து, அதுதொடர்பான  முழுமையான அறிக்கையை இன்று தாக்கல் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, சிதம்பரத்துக்கு வெளியே வருவரா? அல்லது மேலும் காவலில் வைக்கப்படுவாரா என்பது தெரிய வரும்…