கொல்கத்தா: மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை பதவி நீக்கம் கோரிய வழக்கில், கவர்னர் பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது கொல்கத்தா உயர்நீதிமன்றம்.
மேற்குவங்க ஆளுநருக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பனிப்போர் நீடித்து வருகிறது. இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், சமீபத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநர் தன்கரை டிவிட்டரில் முடக்கினார். அதுபோல நாடாளுமன்றத்தில் திரிணாமுல் எம்பி சுகேந்து சேகர் ரே, 170 விதியின் கீழ் ஒரு முக்கிய தீர்மானத்தை சமர்பித்தார். அதில் மேற்கு வங்க ஆளுநராக இருந்து ஜக்தீப் தன்கரை நீக்குமாறு குடியரசு தலைவரை ராம்நாத் கோவிந்தை வலியுறுத்தினார்.மாநில அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, பிப்ரவரி 12ஆம் தேதி முதல் மேற்கு வங்க சட்டப்பேரவையை ஒத்திவைத்து ஆளுநர் ஜக்தீப் தன்கர் அதிரடியாக அறிவித்துள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் இந்த செயல் “அரசியல் உள்நோக்கம்” கொண்ட செயல் என்று திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மேலும் சட்டசபை கூட்டத்தொடர் இடைநிறுத்தப்பட்டால், மாநில அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது, அது அரசின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஆளுநர் ஜக்தீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது என்று கூறியதுடன், அரசியலமைப்பு சாசனம் 361ன் படி மாநில ஆளுநர் அதிகாரம் படைத்தவராகிறார். எந்தவொரு நீதிமன்றமும், ஆளுநரை எதிர்மனு தாரராக சேர்த்து பதில் அளிக்க உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர்.