கொல்கத்தா : 

 

ந்தியாவில் முதல் முறையாக நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்தது கொல்கத்தா உயர்நீதிமன்றம்.

கொல்கத்தாவில் உள்ள நெருப்பு கோயிலுக்குள் (Fire Temple) தங்களை அனுமதிக்க கோரி புரோச்சி என் மேத்தா மற்றும் சனயா மேத்தா வியாஸ் என்ற இரண்டு பெண்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.

முன்னதாக, கொல்கத்தாவின் மையப்பகுதியில் மெட்கால்ப் வீதியில் உள்ள பார்சி வழிபாட்டுத்தலமான நெருப்பு கோயிலுக்குள் செல்ல தங்களுக்கு கோயில் நிர்வாகம் அனுமதி மறுப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தது.

கோயில் நிர்வாகத்துடன் இணைந்து கொல்கத்தா பார்சி சொராஸ்ட்ரியன் சங்கமும் இவர்களை எதிர்த்து நீதிமன்றம் சென்ற நிலையில்.

கோயிலுக்குள் நுழைய அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்த மேத்தா மற்றும் வியாஸ் ஆகிய இருவரின் பெற்றோரில், அவர்களின் தாயார் மட்டுமே பார்சி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அனுமதி மறுப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது..

இந்த வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி கிளை விசாரித்துவந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும், தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் இதனை பெரிதும் எதிர்பார்ப்பதாக கொல்கத்தா பார்சி சொராஸ்ட்ரியன் சங்கம் கோரிக்கை வைத்தது, இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த தனி நீதிபதியின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அந்த தீர்ப்பில், இரண்டு காமிராக்கள் பொருத்தி சமூக வலைத்தளம் வாயிலாக ஒளிபரப்பவும், அதற்கு தேவையான அனைத்து செலவினங்களையும் மனுதாரரே ஏற்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தனி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்போது, நீதிமன்ற நடவடிக்கைகளை முதல் முறையாக நேரடியாக காண பல்வேறு தரப்பினர் ஆர்வமுடன் உள்ளனர்.