கொல்கத்தா: மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற மாபெரும் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான வழக்கில், முறைகேடாக பணி நியமனம் பெற்ற 1911 ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி அதிர்ச்சி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் பெரும் ஊழல் நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக, மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இருந்த பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பலர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கில், மேற்குவங்க மாநில தேர்வாணைய ஆலோசகர் சாந்தி பிரசாத் சின்ஹா, முன்னாள் தேர்வாணைய தலைவர் அசோக் சின்ஹாவும் கைது செய்யப்பட்டனர். இது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் காங்கோபத்யாய் விசாரித்து வந்தார். தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அப்போது மாநில கல்வி மந்திரியாக இருந்த பார்த்தா சட்டர்ஜி, தற்போதைய கல்வி இணை மந்திரி பரேஷ் அதிகாரி ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. பின்னர் இதுகுறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ, west bengal school service commission முலம் நடைபெற்ற பல்வேறு துறைகளுக்கான பணி நியமனங்களில் 21000 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என கூறியது.
இந்த நிலையில், இந்த ஊழல் வழக்கில், முதல்கட்டமாக முறைகேடாக சேர்க்கப்பட்ட 1,911 ‘குரூப்-டி’ (ஆசிரியர்கள்) பணி நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் காங்கோபத்யாய் உத்தரவு பிறப்பித்தார்.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையிலான மாநில அரசு, சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், இந்த ஆசிரியர் நியமன ஊழல், அவரது ஆட்சிக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தி உள்ளது.