ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரக்ஷா பந்தனுடன் தொடங்கியதாக கூறப்படும் இந்த ஆண்டுக்கான பண்டிகை கால மொத்த விற்பனை ரூ. 4 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) இன்று வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
வடஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் கொண்டாடும் கர்வா சவுத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் ரூ. 22000 கோடி வசூலானதாக கூறியுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே பண்டிகைக்கு நடைபெற்ற விற்பனையை விட 46 சதவீதம் அதிகம் எனவும் கடந்த ஆண்டு ரூ. 15000 கோடிக்கு வியாபாரம் ஆனதாகவும் தெரிவித்துள்ளது.
கர்வா சவுத் பண்டிகைக்காக டெல்லியில் மட்டும் இதுவரை ரூ. 4,000 கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
ஆடைகள், நகைகள், ஒப்பனை-காஸ்மெட்டிக்ஸ், பரிசுப் பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் என இந்த பண்டிகைகால விற்பனையில் இ-காமர்ஸ் தளங்கள் மூலம் நடைபெறும் விற்பனை சூடு பிடித்துள்ளதாகவும் இது எதிர்பார்த்ததை விட அதிகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) இது கடந்த ஆண்டை விட 26 சதவீத உயர்வை சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த பண்டிகை கால விற்பனை தீபாவளி, சத் பூஜை முடிந்து நவம்பர் 15 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஆண்டு மொத்த பண்டிகைகால விற்பனை ரூ. 4 லட்சம் கோடியை தொடும் என்று கூறப்படுகிறது.