டெல்லி: தேசிய குடிமக்கள் பதிவு தொடர்பான தகவல்களை திரட்டுயதில் 1,600 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய தணிக்கை வாரியமான சிஏஜி கூறியிருக்கிறது.
தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்ட திருத்தம் ஆகிய இரு அம்சங்கள் பெரும் விவாத பொருளாக மாறி இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்திருக்கிறது.
இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான தகவல்களை திரட்டி, பதிவேற்றுதல், அதற்கான செலவினங்கள் குறித்து சிஏஜி தணிக்கை செய்திருக்கிறது.
அந்த அறிக்கையில் 1600 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக சிஏஜி கூறி இருக்கிறது. இந்த தகவலை அசாம் மாநில நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: இது ஒரு மிகப்பெரிய முறைகேடு. சிஏஜி அறிக்கையில் அதன் விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சட்டசபையில் அடுத்த வாரம் அரசானது இது பற்றிய விவரங்களை தெரிவிக்கும்.
முறைகேடு நடந்திருப்பதாக நான் கூறவில்லை. சிஏஜி அறிக்கை கூறுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த பதிவேடு தொடர்பான தகவல்களை திரட்டுவதில் தான் செலவினங்கள் கணக்கு காட்டப்பட்டுள்ளன என்றார்.