டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்புப் பணிகள் குறித்த பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுடன அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா தலைமையில் உயர்நிலைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
காணொளியில் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா தடுப்பு மேலாண்மை மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி ஆய்வு செய்யப்பட்டது. மாநில சுகாதாரத் துறை மூத்த நிபுணர்கள், சுகாதாரத் துறைச் செயலாளர், உள்துறை அமைச்சக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கொரோனா நிலைமை, அதன் பரவல் மற்றும் பாதிப்பை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தனர். விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரமாக கடைப்பிடிக்குமாறு அமைச்சரவைச் செயலாளர் மாநிலங்களை வலியுறுத்தினார்.