சென்னை:

த்தியஅரசு கொண்டுவந்துள்ள  குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

மத்தியஅரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதாப்படி, பாகிஸ்தான், பங்களா தேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து மதத் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள், மாறாக அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றும், இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மசோதா கடுமையான விவாதங்களுக்குப் பிறகு கடந்த திங்கட்கிழமை ( 09-12-2019) அன்று மக்களவையிலும், கடந்த புதன்கிழமை ( 11-09-2019) அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப் பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டு உள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டம், வன்முறைகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் திமுக போராட்ட அறிவிப்பை வெளியிட்ட உள்ளது.

இந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக இளைஞர் அணி சார்பில்,  குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சைதாப்பேட்டையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்து எறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவருடன் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்ட   உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக இளைஞரணி தொண்டர்களைபோலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர், கும்பகோணம், சேலம், தஞ்சை, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டங்களில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த திமுக இளைஞரணியினர் கைது செய்யப்பட்டனர்.