கொல்கத்தா

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு  எதிரான தீர்மானம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடெங்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.   இந்த சட்டத்துக்கு எதிராகக் கேரளா, பஞ்சாப், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அம்மாநில ஆளுநர் மத்திய அரசின் சட்டத்தை அரசு எதிர்க்கக் கூடாது எனக் கருத்து தெரிவித்தது சர்ச்சையை உண்டாக்கியது.

நேற்று மேற்கு வங்க மாநிலத்தில் கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் வழியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த தீர்மான மசோதாவை அம்மாநில சட்டப்பேரவை விவகார அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி தாக்கல் செய்தார்.   இம்மசோதாவில், மத்திய அரசு இந்த சட்டத்தையும், மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடும், மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மசோதா மீதான விவாதத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, “திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம்  அரசியல் சட்டம் மற்றும் மனிதத்தன்மைக்கு எதிரானது.  இச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அத்துடன் தேசிய மக்கள் தொகை மற்றும் குடிமக்கள் பதிவேடும் திரும்பப் பெற வேண்டும்.” எனப் பேசினார்.

பாஜக இந்த தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மற்ற எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.