டெல்லி:
மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்தச் சட்டமசோதாவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, மக்கள் நீதி மய்யம் உள்பட 144 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சிஏஏக்கு தடை விதிக்க உச்சநீதி மன்றம் அமர்வு மீண்டும் மறுப்பு தெரிவித்து உள்ளது.
மேலும் வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது.
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில மாநிலங்கள் சிஏஏ சட்டத்தை திரும்ப பெறக்கோரி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானங்களும் இயற்றி உள்ளன.
இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இருந்து அரசியல் கட்சிகள், சமுக ஆர்வலர்கள் என ஏராளமானோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உச்சநீதி மன்றம், சிஏஏக்கு எதிராக நாட்டில் நடந்து வரும் வன்முறைகள் நிறுத்தப்படாமல் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது, வன்முறையை நிறுத்தினால் மட்டுமே குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று திட்டவட்டமாக தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, இந்த சட்டத்துக்கு எதிராக இவ்வளவு மனுக்கள் ஏன் என்ற காரணத்தை அறிய முடியவில்லை என்றும், மனுக்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
அப்போது வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், 144 மனுக்களில் 60 மனுக்கள் மட்டுமே அரசுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
அதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல் ஒருதலை பட்சமான உத்தரவு பிறப்பிக்க போவதில்லை என்றார்.
அதைத்தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினால்.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘சிஏஏவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டனர்.