புதுடெல்லி: நாட்டின் தனியார் மருத்துவமனைகளில், சிசேரியன் பிறப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. ஆனால், தனியார் மருத்துவமனைகளிலோ அதன் விகிதம் மிக அதிகம்.
பல மாநிலங்களில், அந்த விகிதம் 80% என்பதற்கும் அதிகமாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், இதேபோன்றதொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போதைய நிலையை ஒப்பிடுகையில், இப்போது இன்னும் மோசமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயத்தில் மேற்குவங்கமும் ஜம்மு காஷ்மீரும்தான், தனியார் மருத்துவமனைகளில் நிகழும் சிசேரியன் பிறப்பில் முதலிடம் வகிக்கின்றன. மேற்குவங்கத்தில் அந்த விகிதம் 83% என்பதாகவும், ஜம்மு காஷ்மீரில் 82% என்பதாகவும் உள்ளது. தெலுங்கானாவில் 81.5% என்பதாக உள்ளது.
அதேசமயம், மாநிலத்தில் நிகழும் ஒட்டுமொத்த பிறப்பில், எத்தனை பிறப்புகள் தனியார் மருத்துவமனைகளில் நிகழ்கின்றன என்ற கணக்கு தனி என்பது குறிப்பிடத்தக்கது.