போபால்:  மத்தியபிரதேச மாநிலத்தில், பாரதியஜனதா கட்சியின் ஆட்சியின் தலைவிதியை நிர்ணயிக்கும் வகையில் நடைபெற்ற 28 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் பாஜக 17 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தில் பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது உறுதியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் காரணமாக, ஜோதிராதித்யா சிந்திதா தலைமையில் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு தாவியதால், அங்கு ஆட்சி மாறியது. அதையடுத்து அங்கு சிவராஜ்சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி பதவி ஏற்றது.

2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114; பாஜக 109 இடங்களில் வென்றிருந்தன. 2019 அக்டோபரில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால் காங்கிரஸின் பலம் 115 ஆக அதிகரித்தது. 2019 லோக்சபா தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ. ஜி.எஸ். தோமர் போட்டியிட்டு வென்றதால் பாஜகவின் பலம் 108 ஆக குறைந்தது. 2019 காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வாரி லால் சர்மா காலமானதால் காங்கிரஸ் பலம் மீண்டும் 114 ஆக குறைந்தது. அதுபோல, இந்த ஆண்டு ஜனவரியில் பாஜக எம்.எல்.ஏ. அகர் மனோகர் காலமானதால் பாஜகவின் பலம் 107 ஆக குறைந்தது.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய அந்த கட்சியின் பலம் சட்டசபையில் 92 ஆனது. இதையடுத்து, அங்கு காலியாக உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மத்திய பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவிதியை இந்த தேர்தல் தீர்மானிக்கப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்ற வாயப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இடைத்தேர்தல் நடைபெற்ற 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பாஜகவின் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். அதேநேரத்தில் ஆட்சியை தக்க வைக்க குறைந்தபட்சம் 8 தொகுதிகளிலாவது பாஜக வெல்ல வேண்டும்.

இந்த பரபரப்பான எதிர்பார்ப்புக்கு இடையில்  இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலையில் ம.பி. சட்டசபையில் காங்கிரஸுக்கு 87; பாஜகவுக்கு 107; பகுஜன் சமாஜ்-2 சமாஜ்வாதி-1; சுயேட்சைகள் 4 பேர் உள்ளனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 3-ல் 28 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது.  இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வென்றால் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, சுயேட்சைகள் ஆதரவுடன் மீண்டும் அக்கட்சி ஆட்சி அமைக்கவும் முயற்சிக்கலாம்.

இதனால் மத்திய பிரதேசத்தில் பெரும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. ஆனால், இதுவரை வெளியாகி உள்ள வாக்கு எண்ணிக்கை விவரங்களைப் பார்க்கும்போது,  மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

17 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 9 தொகதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.