பீகார் தேர்தல் களத்தில் நேரடியாக இறங்கிய ராகுல்காந்தி.. எதிர்க்கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு முடிந்தது..
மூன்று கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது.
ஆர்.ஜே.டி. தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவியது.
அந்த கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் ( சி.பி.எம்.எல்.) கட்சி, தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்து முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.
காங்கிரஸ் கட்சியும், தனித்துப் போட்டியிடப்போவதாக எச்சரித்தது.
இதனால் எதிர்க்கட்சிகள் அமைத்திருந்த ‘மெகா கூட்டணி’’ உடையும் ஆபத்து ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேரடியாகக் களத்தில் இறங்கினார்.
இதையடுத்து ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், ,ராகுல்காந்தியுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்..
இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
தொகுதிப் பங்கீட்டையும் இரு தலைவர்களும் பேசி முடித்துள்ளனர்.இதன் படி, காங்கிரஸ் கட்சிக்கு 68 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆர்.ஜே.டி. 136 தொகுதிகளில் போட்டியிடும்.
தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சி.பி.எம்.எல். கட்சிக்கு 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்த கட்சி மீண்டும் எதிர்க்கட்சி கூட்டணியில் சங்கமம் ஆகி விட்டது.
சி.பி.ஐ.மற்றும் சி.பி.எம். கட்சிகளுக்கு தலா 5 இடங்கள் கொடுக்கப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும்.
மாறாக ஆளும் ஐக்கிய ஜனதா தளம் –பா.ஜ.க. கூட்டணியில் மோதல் முற்றியதால், கூட்டணி உடைந்துள்ளது.
அந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி, தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
முதல்-அமைச்சர் நிதிஷ்குமாருடன், ஆரம்பம் முதல் மோதலில் இருந்த லோக்ஜனசக்தி,’’ மோடியுடன் விரோதம் இல்லை. ஆனால் நிதிஷ்குமாரை சும்மா விடமாட்டோம்’’ என்ற ஆவேச முழக்கத்துடன் களம் இறங்க முடிவு செய்துள்ளது.
‘’தேசிய அளவில் பா.ஜ..க.கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் பீகாரில் கூட்டணி கிடையாது’’ என லோக்ஜனசக்தி அறிவித்துள்ளது.
பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில், பஸ்வான் கட்சி 143 தொகுதிகளில் களம் காண உள்ளது.
பா.ஜ.க.வுக்கு எதிராக அந்த கட்சி வேட்பாளர்களை நிறுத்தாது.
-பா.பாரதி.