ராய்ப்பூர்

யோகா பயிற்சி செய்த நேரு மோடி உள்ளிட்ட பலர் பெரிய பதவிக்கு வந்துள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

பிரபல யோகா ஆசிரியரான பாபா ராம்தேவ் ஒரு புகழ்பெற்ற தொழிலதிபரும் ஆவார். இவர் முதலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்தார். கடந்த சில மாதங்களாக பாஜகவுக்கான ஆதரவு பேச்சுக்களை விலக்கிக் கொண்டுள்ளார்.

தற்போது பாபா ராம்தேவ் யோகா பயிற்சி பற்றி மட்டும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவர் ராய்ப்பூரில் அவரது பதஞ்சலி நிறுவனத்தின் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பாபா ராம்தேவ், “யோகா பயிற்சி என்பது சாதாரணமானது இல்லை. யோகா பயிற்சி செய்பவர்கள் ராஜ யோகத்தை அடைய முடியும்.

ஜவகர்லால் நேரு யோகா பயிற்சி செய்து வந்தார், அவருக்கு ராஜ யோகம் கிடைத்து அவர் பிரதமர் ஆனார். அடுத்ததாக இந்திரா காந்தி யோகா பயிற்சி செய்தார். அவரும் பிரதமர் ஆனார்.

அதை போலவே தேநீர் வியாபாரியின் மகனான மோடி பிரதமராகும் அளவுக்கு யோகா பயிற்சியால் உயர்ந்துள்ளார். யோகி ஆதித்யநாத் தனது யோகா பயிற்சி மூலம் நாட்டின் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்துக்கு முதல்வர் ஆகி உள்ளார்.

தற்போது ராகுல் காந்தி யோகா பயிற்சி செய்து வருகிறார். அனைத்து அரசியல் வாதிகளும் தங்களுக்குள்ள அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும்” என தெரிவித்தார்.

இதற்கு செய்தியாளர்கள், “அதாவது ராகுல் காந்தியும் யோகா பயிற்சி செய்வதால் அவரும் விரைவில் பிரதமர் ஆவார் என சொல்ல வருகிறீர்களா?” என கேட்டுள்ளனர்.

ஒரு நிமிடம் அதிர்ந்து போன பாபா ராம்தேவ் தாம் அந்த அர்த்தத்தில் கூறவில்லை எனச் சொல்லி தனது செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.