சென்னை

ரத நாட்டியம் கற்றுக் கொண்டால் பெண் தன்மை வராது என இயக்குநர் சாய் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

குமார சம்பவம் என்னும் திரைப்படம் பரத நாட்டியத்தின் சிறப்பை விளக்கும் வகையில் உருவாகி வருகிறது  சாய் ஸ்ரீராம் என்பவர் இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார்.  இவருடன் இப்படத்தில் நிகிதா மேனன், சாய் அக்‌ஷிதா, மீனாட்சி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சென்னை சாலிகிராமத்தில் நடந்த இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சாய் ஸ்ரீராம், “தமிழ்த் திரைப்படங்களில் கடந்த 35 ஆண்டுகளாகப் பரதநாட்டியத்தை மிகவும் மோசமாகச் சித்தரிக்கின்றனர்.  பரதநாட்டியம் கற்றுக் கொண்டால் பெண் தன்மை வரும் எனத் தவறாக சொல்கின்றனர்.

உதாரணமாக அஜித் நடித்த ‘வரலாறு’ திரைப்படத்தில் அவர் பரதம் கற்றுக் கொண்டதால் பெண் தன்மை வந்து திருமணம் ஆகவில்லை எனக் காட்டப்படும் அதைப் போல் ’விஸ்வரூபம்’ படத்திலும் கமலஹாசன் நாட்டியக் கலைஞராக உள்ளதால் அவருக்குப் பெண் தன்மை வந்து அவர் மனைவி அவரை வெறுப்பதாகக் கூறப்பட்டிருக்கும்.

உண்மையில் பரதம் என்பது புனிதமானது என்பதையும் அதைச் சிறுமைப்படுத்துவது தவறு என்பதையும் யாருமே  கருத்தில் கொள்ளவில்லை. இவ்வகையில் அஜித் மற்றும் கமல் நாட்டியக் கலைக்குத் துரோகம் செய்துள்ளனர்.  இதைத் தடுக்கவே நான் குமார சம்பவம் என்னும் இப்படத்தை எடுத்துள்ளேன்.  இனி யாரும் பரதத்தைக் கேவலம் செய்யக்கூடாது என்பதே எனது நோக்கமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.