சென்னை மாநகரப் பேருந்தில் கூட்டமான நேரங்களில் பயணிக்கும் போது நடத்துனரிடமிருந்து டிக்கெட் வாங்குவதற்கு சிரமமாக இருந்தது.
ஆனால், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA – கும்டா) அறிமுகப்படுத்திய ‘சென்னை ஒன்’ செயலி, இந்த அனுபவத்தை டிஜிட்டல் முறையில் எளிதாக்கியுள்ளது.
ஓலா, உபர் போன்ற சேவைகளின் பணமில்லா வசதியைப் போலவே, இப்போது MTC பேருந்துகள், ரயில்வே மற்றும் மெட்ரோ பயணங்களுக்கான டிக்கெட்டுகளை இந்த செயலியில் வாங்கலாம்.

தவிர, பேருந்து வருகை நேரத்தையும் செயலி மூலம் நேரடியாக கண்காணிக்கலாம்.
இந்த செயலி எப்படி செயலாற்றுகிறது என்பதை, முகப்பேர் – தி.நகர் மற்றும் சென்ட்ரல் – ராயபுரம் வழித்தடத்தில் பயணித்த செய்தி நிறுவன ஊழியர்கள் இதன் அனைத்து அம்சங்களும் சீராக செயல்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து TOI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சோதனையின் போது, நேரடியாக பேருந்துகளைப் பார்க்கும் வசதி, QR கோடு ஸ்கேன் செய்து உடனடியாக டிக்கெட் பெறும் வசதி ஆகியவை சீராக செயல்பட்டன.

உதாரணமாக, 104CX பேருந்து நேரம் தவறாமல் வந்தது. அதன்பின் செயலி மெட்ரோ மற்றும் பிற MTC பேருந்துகளை இணைத்து, பயணத்தை எளிதாக பரிந்துரைத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
‘சென்னை ஒன்’ செயலியின் முக்கிய அம்சம், MTC, ரயில்வே, மெட்ரோ மூன்றையும் ஒரே செயலியில் பயன்படுத்தலாம். QR கோடு ஸ்கேன் செய்து உடனே டிக்கெட் பெறலாம்.
ஏற்கனவே, நடத்துனரிடமிருந்து ஜி-பே மற்றும் கார்டு மூலம் டிக்கெட் பெறும் வசதி இருந்தபோதும் இந்த QR கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி பயணத்தை மேலும் எளிதாக்குவதாகக் கூறப்படுகிறது.
இதன் அடுத்த கட்டமாக, Ola, Uber, Rapido, SETC மற்றும் ஆம்னி பேருந்துகளையும் இதில் இணைக்க கும்டா திட்டமிட்டுள்ளது.