சென்னை,
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக கடந்த 7 நாட்களாக அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்படாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு வாரமாக தென்னக ரெயில்வே அதிகமான ரெயில் சேவைகளை இயக்கி பொது மக்களின் கஷ்டத்தை போக்கி வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவி வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்னும் 4 நாட்களில் பொங்கல் பண்டிகை வர உள்ளது. இதையொட்டி வேலை நிமித்தமாக தமிழகத்தில் ஆங்காங்கே பணியாற்றி வருபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக தமிழக அரசு சார்பாக 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சிறப்பு பேருந்துகள் இயக்குவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், அதற்கான முன்பதிவும் இன்னும் தொடங்கவில்லை.
இந்நிலையில், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பொங்கல் பண்டிகைக்காக தாம்பரம் – நெல்லை மார்க்கத்தில் 8 சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரெயில்வேயின் இந்த அறிவிப்பு, பேருந்து ஸ்டிரைக் காரணமாக செய்வதறியாது இருந்த பொதுமக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது
இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
12ம் தேதி மாலை 4.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும், வரும் 14 மற்றும் 20ம் தேதிகளில் இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக வரும் 11ம் தேதி இரவு 9.30 மணிக்கு நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கும், 16ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
வரும் 22ம் தேதி மாலை 6.25 மணிக்கு நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே இயக்குகிறது.
அதன்படி வரும், 12ம் தேதி காலை 7 மணிக்கு எழும்பூரில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதே போல்12ம் தேதி இரவு 9.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும், மறுமார்க்கமாக ஜனவரி 16ம் தேதி காலை 6.40 மணிக்கு நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யப்படாத ரயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.