கொழும்பு:
லங்கையில் இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 7 மணியளவில் நடந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

லுணுகல பகுதியிலிருந்து தலைநகர் கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

மொனராகலை – பதுளை பிரதான வீதியின் பசறை – 13ம் கட்டை பகுதியிலேயே பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நடந்தபோது பஸ்ஸில் சுமார் 50 பேருக்கும் அதிகமானோர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

13ம் கட்டை பகுதியில் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட நிலையில், விபத்து ஏற்பட்ட பிரதான வீதியில் பாரிய கற்கள் வீழ்ந்துள்ளன.

இந்த நிலையில், குறித்த பகுதியில் ஒரு வாகனம் மாத்திரமே பயணிக்கக்கூடிய நிலையில், லாரி ஒன்றுக்கு இடமளிக்க முயற்சித்த போது பஸ் சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்து நடந்த உடனே 7 பேர் உயிரிழந்திருந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பசறை மற்றும் பதுளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் சிலர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.