சென்னை:
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுதும் பயணிகள் நடத்துநர்களிடம் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். இதனால் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது
நேற்று முன்தினம் பேருந்து கட்டணத்தை அதிரடியாக தமிழக அரசு உயர்த்தியது.
உதிரிபாகங்கள் விலை ஏற்றம், வாகன இயக்கம், பராமரிப்பு செலவு அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை வழங்குதல் போன்றவை காரணமாக தமிழக அரசு பேருந்து கட்டணத்தை கட்டணத்தை உயர்த்தியதாக தமிழக அரசு தெரிவித்தது.
கிட்டதட்ட இரு மடங்கு உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். தொடர்ந்து இரண்டாவது நாளாக பயணிகளுக்கும் நடத்துநர்களுக்கும் வாக்கு வாதங்கள் தொடர்கின்றன.
உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்ற நகரப்பேருந்திலும் இன்று காலை பிரச்சினை ஏற்பட்டது.
உயர்த்தப்பட்ட கட்டணத்தை தர முடியாது என பயணிகள் கூற.. அவர்களுடன் ஓட்டுநர் வாக்குவாதம் செய்தார்.
பயணிகள் தங்கள் முடிவில் உறுதியாக இருக்கவே, பிரச்சினை பெரிதானது. இறுதியில் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே நடுவழியில் பேருந்து நிறுத்தப்பட்டது.
போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். ஆனால் பயணிகள் அதை ஏற்க மறுத்தனர்.
பிறகு பயணிகளை அங்கேயே இறக்கிவிட்டு, பேருந்தை, பணிமனைக்கு அதிகாரிகள் அனுப்பினர். இதையடுத்து அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கிருந்து நடந்தே சொந்த ஊருக்கு சென்றனர்.
இதே போல், திருச்சியில் இருந்து திருப்பதிக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் செல்வதற்கு 30-க்கும் மேற்பட்டோர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்திருந்தனர்.
அவர்கள் நேற்றிரவு திருப்பதி செல்ல மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் ஓட்டுநர், உயர்த்தப்பட்ட கட்டணத்துடன் சேர்த்து கூடுதலாக ரூ.100 தரும்படி கேட்க.. பயணிகள் மறுத்தனர்.
“நாங்கள் ஏற்கனவே திருப்பதி செல்ல ரூ.374 மற்றும் முன்பதிவு செய்ய பணம் கொடுத்துள்ளோம். திடீரென நபர் ஒருவருக்கு ரூ.100 கட்டணம் ஏன் தர வேண்டும்” என்று வாக்குவாத்ததில் ஈடுபட்டனர்.
இதனால் வேறு வழியின்றி அவர்கள் பழைய கட்டணத்திலேயே திருப்பதி செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள திருவளர்ச்சோலையில் மூன்று பேருந்துகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சுமுகமாக்கினர்..
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், இரு மடங்கு கட்டணம் என்பதால், நடுவழியிலேயே இறங்கி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்தே செல்வதையும் பார்க்க முடிந்தது.
பயணிகள் வாக்குவாதம் காரணமாக திருச்சியில் இயக்கப்பட்ட சில பேருந்துகளில் பழைய கட்டணத்தையே கண்டக்டர்கள் வசூலித்ததும் நடந்தது.
இது போல தமிழகம் முழுதும் கட்டண உயர்வை எதிர்த்து பயணிகள் போராடுவதும், நடத்துநரிடம் வாக்குவாதம் செய்வதும் தொடர்கிறது.