சென்னை

ம்னி பேருந்து உரிமையாளர்கள் வெளிமாநில பதிவெண் கொண்ட  ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை நீட்டிக்க கோரிக்கை இட உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், வெளிமாநில பதிவு எண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் அடங்கும். தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழக அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுகிறது.

ஆகவே  வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அவை முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலையில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்கக் கூடாது என கடந்த 12-ம் தேதி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கால அவகாசம் வேண்டி கோரிக்கை வைத்தனர். அதன்படி, தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் இயங்க இன்று வரை கால அவகாசம் விடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான காலக்கெடு நாளை (ஜூன் 18) காலையுடன் முடிவடைகிறது. எனவே வெளி மாநில பதிவெண்ணுடன் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் நாளை இரவு முதல் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையொட்டி, போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து ஆணையரை நாளை பிற்பகல் சந்திக்க ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். அப்போது வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கான உரிமத்தை மேலும் 3 மாதம் நீட்டிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்க ஆம்னி உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவெண்ணுக்கு மாறும் வகையில் 3 மாதம் உரிமத்தை நீட்டித்துத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைக்க ஆம்னி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.