சென்னை: நிவர் புயல் எதிரொலியாக 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்தை நிறுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.  நாளை புயலாக மாறி அதற்கு மறுநாள் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புயலுக்கு நிவர் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக நாகை, தஞ்சாவூர், திருவாரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,  கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை என தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புயல், கனமழையை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இந் நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்தை நிறுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும், 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

பொதுமக்களும், தங்கள் சொந்த வாகனங்கள் மூலம், அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.