சென்னை புரெவி புயல் காரணமாக தென்மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
புரெவி’ புயல் தென் தமிழக கடலோர பகுதியை இன்று நெருங்குகிறது என்றும், கன்னியாகுமரி-பாம்பன் இடையே இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவோ, நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையோ கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை முதல் ராமேஸ்வரம் பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புரெவி புயல் காரணமாக தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தனுஷ்கோடி பகுதியில் கடல் அலையில் சிக்கி புதிதாக போடப்பட்ட சாலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு வீசிய சூறைக்காற்று காரணமாக நங்கூரம் அறுந்து படகுகள் சேதமடைந்து, கரை ஒதுங்கி உள்ளன. இதனால் மீனவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது .
தொடர்ந்து மழை தீவிரமடைந்து வருவதால் ராமேஸ்வரத்தில் நேற்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆங்காங்கே மரங்களும் சாய்ந்துள்ளன. தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், புரெவி புயல் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடிக்கு இரு மார்க்கமாக செல்லும் 3 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.