திருச்செந்தூர்: உடன்குடி அருகே, பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக காணப்படும் நெடுஞ்சாலையில் சமத்துவ மக்கள் கட்சியினர் வாழை மரம் நட்டு போராட்டம் நடத்தினர்.  இந்த திடீர் போராட்டம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பிறகா வது அரசும், மாவட்ட நிர்வாகமும் சாலையை சீரமைக்குமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

தூத்துக்கு மாவட்ட பாராளுமன்ற தொகுதிக்கு உள்பட்டதும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதுமான உடன்குடியில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் தண்ணீர் தேங்கி, மேடும் பள்ளமுமாக வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் நடந்துசெல்லக்கூட முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக உடன்குடியில் இருந்து தாண்டவன் காடு செல்லும் ரோடு கடந்த பல வருடங்களாக முற்றிலும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

முக்கிய வணிக ஸ்தலமான உடன்குடிக்கு இந்த ரோட்டின் வழியாகத்தான் சுமார் 50 க்கு மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் , மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும்  வருகிறார்கள். குண்டும், குழியுமான இந்த ரோட்டில் பலர் கீழே விழுந்து படுகாயமடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், வியாபாரிகள் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும், சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பேருராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், இன்னும் சீரமைக்கப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சாலையில்,  மழை நீர் தேங்கி பொது மக்கள் மற்றும் மாணவர்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே மிக முக்கியமான உடன்குடி – தாண்டவன் காடு ரோட்டை மரமத்து செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி அகில இந்திய சமத்து மக்கள் கட்சி சார்பில் பண்டாரஞ்செட்டி விளை பெண்கள் பள்ளி முன்பு நூதன முறையில் ரோட்டில் வாழை மரம் நட்டு போராட்டம் நடந்தது.

இப்போராட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட ச.ம.க., செயலாளர் ஆர்.தயாளன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்திகுமார் , மாவட்ட மாணவரணி செயலாளர் சித்திரைவேல் ,உடன்குடி ஒன்றிய செயலாளர் அழகேசன், சீர்காட்சி பஞ்சாயத்து செயலாளர் பெருமாள், குதிரைமொழி பஞ்சாயத்து செயலாளர் முருகேசன், நங்கைமொழி பஞ்சாயத்து செயலாளர் முருகன், மகளிர் அணி லிங்ககனி வார்டு செயலாளர்மாரியப்பன், சிவலூர் கிளை செயலாளர் ஐக்கோர்ட்துரை உட்பட ஏராளமான சமத்துவ மக்கள் கட்சியினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கட்சியினரின் இந்த திடீர் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பிறகாவது தொகுதி அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனும், தொகுதி எம்.பி.யான கனிமொழியும் கவனத்தில் எடுத்து, சாலையை விரைவில் சீரமைப்பார்கள் என்று நம்புவதாக அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர்.