பாஜக ஆளும் உ.பி., மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் குறிப்பாக சிறுபான்மையினர் தொடர்புடைய குற்ற சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் பிப்ரவரி 2024 அறிக்கையின்படி, ஏப்ரல் 2022 மற்றும் ஜூன் 2023 க்கு இடையில் டெல்லி, அசாம், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உ.பி.யில் வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து 128 சொத்துக்கள் புல்டோசர்களால் இடிக்கப்பட்டன.

மத்தியப் பிரதேசத்தில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் தந்தையின் சொத்துக்களில் புல்டோசர் பயன்படுத்தப்பட்டது, மேலும் மொராதாபாத் மற்றும் பரேலியிலும் புல்டோசர்களைப் பயன்படுத்தி சொத்துக்கள் இடிக்கப்பட்டன. சமீபத்தில், ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ரஷித் கானின் 15 வயது மகன் பள்ளியில் தனது வகுப்பு தோழனை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவரது வீடும் புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டது.

சமீப ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் இந்த புல்டோசர் நீதிக்கு எதிராக ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பு மற்றும் டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடைபெற்ற சம்பவத்துக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சிறுபான்மையினரின் வீடுகள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வருவதை அடுத்து இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே மற்றும் ஜஹாங்கிர்புரி வழக்கில் வழக்கறிஞர் ஃபரூக் ரஷித் என்பவர் புதிதாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றவழக்குகளில் தொடர்புடையவராகவோ அல்லது குற்றவாளியாகவோ இருந்தாலும் அதற்காக அவரது வீட்டை இடிப்பது தவறான நடவடிக்கை என்று தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் என்ற அடிப்படையில் ஒருவரின் வீட்டை இடிப்பது சரியல்ல என்று கூறிய நீதிபதிகள் அரசு மற்றும் நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், ஒருவர் குற்றவாளியாக இருந்தாலும் அவரது வீட்டை இடிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினர்.

இதற்கு விளக்கமளித்த அரசு வழக்கறிஞர், முனிசிபல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் விதிமீறல் ஆக்கிரமிப்பு வழக்குகளில் நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்த பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.

இதனையடுத்து, முனிசிபல் சட்டப்படி வழங்கப்பட்ட நோட்டீஸ், நடவடிக்கை மற்றும் பிற குற்றச்சாட்டுகள் குறித்து அரசிடம் இருந்து விரிவான அறிக்கையை பெறுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தவிர, பொதுச் சாலைகளை மறிக்கும் எந்தவொரு சட்டவிரோதக் கட்டிடத்திற்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சொத்துக்களை இடிப்பது தொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகளை நீதிமன்றம் கோரியுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.