டெல்லி:  மத்தியஅரசு வக்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது,  சட்டத்தின் மீதான புல்டோசர் தாக்குதல் என  வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால்  கூறினார்.

மக்களவையில்  இன்று வக்பு சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அதன்மீதான விவாதங்கள்  நடைபெற்று வருகின்றன.

இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி.  கே.சி.வேணுகோபால், “நீங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தம் குறித்து குறைந்தபட்சம் திருத்தங்கள் கூறுவதற்கு உறுப்பினர்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், நேற்று பகலில் தான் உறுப்பினர்களுக்கு திருத்த மசோதா வழங்கப்பட்டது. பிற்பகல் 3.30 மணிக்குள் திருத்தங்களை கூற வேண்டுமென்றால் எப்படி முடியும்?

நீங்கள் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துகிறீர்கள். இதுபோன்ற சம்பவம் இந்த அவையில் நடந்ததே இல்லை. நிறைய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக ஆராய நேரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை விமர்சித்து கேரள மக்களவை உறுப்பினர் பிரேமசந்திரன் பேசினார்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: ”உறுப்பினர் முக்கிய குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு விவாதத்துக்கு அனுப்பப்பட்டு விரிவான கருத்துகள் பெறப்பட்டுள்ளது. அதனை அமைச்சரவை ஏற்றது. உங்கள் கோரிக்கையின் அடிப்படையில்தான் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. காங்கிரஸ் காலத்தில் அமைக்கப்பட்ட குழு போன்று அல்ல, இது ஜனநாயக ரீதியில் அமைக்கப்பட்ட குழு. குழுவின் திருத்தங்களை ஏற்காவிடில் எதற்காக குழு அமைக்கப்பட வேண்டும்” என்று பதிலளித்தார்.