சென்னை: சென்னையில் வீடு உள்பட கட்டிடம் கட்டுபவர்கள், அதற்காக அரசு அனுமதிபெற்ற ‘பில்டிங் பிளானை’ கட்டிடத்தின் கட்டுமானத் தளங்களில் காட்சிப்படுத்த வேண்டும் வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
அனுமதி வாங்கப்பட்ட பிளானில் இல்லாதவாறு மாற்றி கட்டப்பட்டிருந்தாலோ, அனுமதிக்கப்பட்ட கட்டடத் திட்டத்தை மீறினாலோ, மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கட்டிட அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் கடந்த அதிமுக ஆட்சியின்போது 2018ம் ஆண்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. அதன்படி கட்டிடம் கட்ட விரும்புபவர்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைனில் மாநகராட்சி உரிமம் பெற்ற கட்டிட அளவையர் அளித்த புதிய கட்டிட வரைபடம், நிலத்துக்கான ஆவணங்கள், கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். அந்த விவரங்களை உதவி நகரமைப்பு அதிகாரிகள் எடுத்துக் கொண்டு நேரில் சென்று சரிபார்த்து அவை அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் ஆன்லைனில் அனுமதி கடிதம் அனுப்பி வைக்கப்படும். இதில் ஏதாவது தகவல்கள் வேண்டுமென்றாலோ, ஆவணங்கள் விடுபட்டு இருந்தாலோ அதுபற்றிய விவரங்களும் உடனடியாக ஆன்லைனிலேயே கட்டிட உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கேற்ற வகையில் ஆவணங்களை சரி செய்து அனுப்பினால் அந்த கட்டிடத்துக்கான அனுமதி ஆன்லைனிலேயே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆன்லைனில் கட்டிட அனுமதி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம், கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி கட்டிட விவகாரத்தில், கட்டுமானத் தளங்களில் அனைத்து விவரங்களுடன் கட்டிடத் திட்டங்களைக் காட்சிப்படுத்துவதற்கான விதியை கண்டிப்பாக அமல்படுத்துமாறு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி 15 மண்டலங்களில் உள்ள அனைத்து நிர்வாக பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர் கள் மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,
பெருநகர சென்னை மாநகராட்சி, நகரின் 15 மண்டலங்களில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களில் அதுகுறித்த விரிவான விவரங்களுடன் கட்டு மானப்பணியிடங்களில் காட்சிப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். இதுதொடர்பான விதிகளை கண்டிப்பாக அமல்படுத்துவதை பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல பொறியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
நகரின் பல்வேறு பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் காட்சிப் பலகைகள் பொருத்தப்படாமல் உள்ளது. இதை உடனே கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து கட்டுமான பணியிடங்களில் வைக்கப்படும் காட்சி பலகை 60 செமீ x 120 செமீ இருக்க வேண்டும். அதாவது 5×10 அடி அளவில் இருக்க வேண்டும்.
காட்சி பலகையில், விண்ணப்பதாரர், தள முகவரி, சர்வே எண், தொகுதி எண், கிராமத்தின் பெயர் விவரங்கள் இடம்பெற வேண்டும். அத்துடன், பதிவுசெய்யப்பட்ட கட்டிடக் கலைஞர், பதிவு செய்யப்பட்ட பொறியாளர், திட்டமிடல் அனுமதி எண், கட்டிட அனுமதி எண், அனுமதியின் காலாவதி தேதி, மாடிகளின் எண்ணிக்கை, முன்பகுதி, சைடு மற்றும் பின்பகுதியில் காலியாக வைக்க அனுமதிக்கப்பட்ட காலி இடம் மற்றும் மற்றும் எத்தனை தளத் திட்டம் போன்றவையும் இடம்பெற வேண்டும்.
விதிகளை மீறி கட்டிடம் கட்டப்படுவது தெரிய வருமானால், அந்த கட்டிடத்திற்கு முதற்கட்டமாக மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும்.
அனுமதி மற்றும் அங்கீகாரம் இல்லாத கட்டிடங்களுக்கு மின்சாரம் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
அங்கீகாரம் பெறாத அல்லது விதிவிலக்கான கட்டிடம் பூட்டியோ அல்லது மூடப்பட்டோ காணப்பட்டால், கட்டிடத்தை மக்கள் ஆக்கிரமிப்பதைத் தடுக்க கட்டிடத்தின் மேற்கூரை துளையிடப்படும்.
அங்கீகரிக்கப்படாத/விலகப்பட்ட கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்படாவிட்டால், கதவுகள், ஜன்னல்கள், கண்ணாடிகள், கழிப்பறை இருக்கைகள், சமையலறை சமையல் மேடை மற்றும் தண்ணீர் விநியோகத்திற்கான குழாய்கள் அனைத்தையும் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர மற்றும் கிராம திட்டமிடல் சட்டம், 1971ன் கீழ் மேல்முறையீடு அல்லது ஏதேனும் மனு தாக்கல் செய்யப்படும் போது, விண்ணப்பம் அதே எண்ணைப் பிரதிபலிக்க வேண்டும் மற்றும் மேல்முறையீடு செய்தால், அசல் எண் இடத்தைக் கண்டறிய வேண்டும்.
கட்டடத்தின் உரிமையாளர், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மேல்முறையீடு நிலுவையில் உள்ளதாக, அசல் விண்ணப்பம், மேல்முறையீடுகள், ரிட் மனு போன்ற விவரங்களை, வளாகத்திற்கு வெளியே உள்ள அறிவிப்புப் பலகையில் காண்பிக்க வேண்டும். அதன் நகலை அதிகாரிகள் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். கழிவுநீர் வடிகால் வாரியம் (CMWSSB) மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சென்னையில், கட்டப்பட்டு வரும் கட்டிடங்களில், விதிமீறல்களுக்காக 66 கட்டடங்களுக்கு பூட்டி சீல் வைக்க மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.