டில்லி
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு ராமர் கோவில் அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என மோடி தெரிவித்துள்ளார்
.
பாஜகவின் 2014 ஆம் வருட மக்களவை தேர்தல் அறிக்கையில் ராமர் கோவில் கட்டுமானம் முக்கிய இடம் பிடித்தது. இந்த வாக்குறுதியும் அப்போதைய தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். ஆனால் மோடி அரசு இதுவரை கோவில் கட்டுமானம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது இதற்கு பல இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
இன்று ஏ என் ஐ செய்தி ஊடகத்துக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், “பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பது முக்கியமாக இருந்தது. தற்போது அது தொடர்பாஜ வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து பிறகு ராமர் கோவில் அமைப்பது பரிசீலிக்கப்பட உள்ளது.
இந்த ராமர் கோவில் அமைப்புக்கு காங்கிரசை சேர்ந்த வழக்கறிஞர்கள் தடையாக இருக்கின்றனர். அதனால் நாட்டில் அமைதி கெடும் சூழ்நிலை உள்ளது. அதனால் காங்கிரஸ் தலைவர்கள் ராமர் கோவில் அமைக்க முட்டுக்கட்டை போடும் வழக்கறிஞரக்ளை அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்த வேண்டும். அதனால் சட்டரீதியான நடவடிக்கைகள் தடை இன்றி நிறைவேறும்” என தெரிவித்துள்ளார்.
பல இந்து மத அமைப்புக்கள் ராமர் கோவில் அமைக்க மோடி அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என கூறி வரும் வேளையில் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.