டில்லி

ட்டிட அமைப்பாளர் மற்றும் கட்டிடம் வாங்குவோர் இடையே ஒரு தலை பட்சமான ஒப்பந்தம் அமைப்பது நியாயமற்ற வர்த்தக முறை ஆகும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு கட்டிட அமைப்பாளர் மற்றும் கட்டிடம் வாங்குவோர் இடையில் நடந்த வழக்கில் தேசிய நுகர்வோர் ஆணையம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்ப்பட்டது. அந்த வழக்கை நீதிபதிகள் யு யு லலித் மற்றும் இந்து மல்கோத்ரா அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று விசாரணை செய்யப்பட்டது.

அந்த விசாரணையின் போது அமர்வு, “பெரும்பாலான கட்டிட ஒப்பந்தங்கள் ஒரு தலை பட்ச ஆதரவாகவே உள்ளன. இந்த வழக்கம் மாற்றப்பட வேண்டும். இரு தரப்பினருக்கும் பொதுவான வகையில் ஒப்பந்தம் அமைவதே சரியான வர்த்தக முறை ஆகும். இவ்வாறு ஒரு தலைப் பட்சமாக அமைக்கப்பட்டுள ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தாலும் அந்த ஒப்பந்தம் செல்லாதது என கருத வேண்டும்.

உதாரணமாக கட்டுமான ஒப்பந்தங்களில் கட்டிடம் வாங்குவோர் தனது தவணையை கட்ட தாமதம் ஆனால் அவர்கள் தனது தவணையை 18% வருட வட்டியுடன் செலுத்த வேண்டும் என உள்ளது. அதே நேரத்தில் கட்டிடம் அளிப்பதில் தாமதம் ஆனால் கட்டிட அமைப்பாளர் பணத்தை 9% வருட வட்டியுடன் திரும்ப தர வேண்டும் என உள்ளது.

நுகர்வாளர் பாதுகாப்பு சட்டம் 1986இன் படி இத்தகைய ஒப்பந்தங்கள் நியாயமற்ற வர்த்தக முறை எனவே கூறப்படுகிறது. அந்த பிரிவில் வர்த்தகத்தை மேம்படுத்த செய்யப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் இரு தரப்பினருக்கும் சம உரிமை அளிக்காத போது அது நியாயமற்ற வர்த்தக முறை என கொள்ள வேண்டும் எனவும் அத்தகைய ஒப்பந்தங்கள் செல்லுபடி ஆகாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளது.