டெல்லி:

மத்திய பட்ஜெட் வெளியான அறிவிப்பால் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டம் மற்றும் மூலதன ஆதாய வரி விதிப்பு முறையை எளிமைபடுத்திய அறிவிப்புகளால் ரியல் எஸ்டேட் துறை மீண்டும் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு திட்டத்தில் வீட்டு வசதி மேம்பாடு ஏற்படும் வகையில் கிராமப் புற வீடு கட்டும் திட்டத்திற்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இது நீண்ட கால திட்டம் என்ற அருண்ஜேட்லியின் அறிவிப்பு இந்த துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வீடு கட்டுமான துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசின் பல திட்டங்களின் கீழ் ஊக்க தொகை, மானியம், வரி பயன் மற்றும் நிறுவன நிதி பெற தகுதி பெற்றவர்கள் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதை கட்டுமான துறை வல்லுனர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வீட்டு வசதி திட்டத்தை முதன்மை நகர்புற பகுதிகளில் செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. நீண்ட கால மூலதன ஆதாயம், கூட்டு மேம்பாடு ஒப்பந்தம், வரி விலக்கு போன்ற கட்டுனர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்கும் என்று நம்புவதாக கட்டுமான நிறுவன நிர்வாக ஒருவர் தெரிவித்தார்.