சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. தொடர்ந்து, நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் சட்டப் பேரவையில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர், சென்னை தலைமைச் செயலகம் வளாகத்தில் உள்ள பேரவை கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏற்கவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காகிதமில்லா இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொரை முன்னிட்டு இன்று காலை சட்டசபை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை நடத்தினர். இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, எஸ்.பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு, பால் பொருட்கள் விலை உயர்வு, நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எழுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அதிமுக சார்பில் எழுப்பவேண்டிய கேள்விகள், சிறப்பு கவன ஈர்ப்பு போன்றவை குறித்து ஆலோசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.