சென்னை: தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். முன்னதாக சபாநாயகர் அப்பாவு மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச்.14 அன்று தொடங்கியது. முதல்நாளான அன்றைய தினம், 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, சட்டப்பேரவை அலுவல் ஆய்வுகுழு கூடி, பேரவை கூட்டத்தொடரை கூட்டுவது குறித்து விவாதித்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த சட்டசபை கூட்டத் தொடர் 17-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மார்ச் 15ந்தேதி அன்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து 16ந்தேதி ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து, இன்று முதல் (17-ந் தேதி) முதல் 21-ந் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், துறை சார்ந்த இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம் பெற உள்ளது. பின்னர், மார்ச் 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் காலை சட்டமன்ற அமர்வு தொடங்கியதும், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, வே.குணசீலன், பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கே.எம் செரியன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துரை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை அமைப்பது தொடர்பாக உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் எ.வ.வேலு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை அமைக்க கூடுதலாக ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனதெரிவித்துள்ளார்
அதிமுக உறுப்பினர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி போளூர் – செங்கம் சாலையை 4 வழிச்சாலையாக்க போக்குவரத்து செறிவு கணக்கெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு; போக்குவரத்து செறிவு கணக்கெடுப்பு பணி இந்த ஆண்டே தொடங்கும் என்றார்.
அதிமுக உறுப்பினர்செங்கோட்டையன், ஈரோடு கோபிச்செட்டிபாளையம் புறவழிச்சாலை பணிகள் எப்போது தொடங்கும் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய அமைச்சர் வேலு, போளூர் – ஜமுனாமுத்தூர் சாலையை விரிவுபடுத்த ரூ.14 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாராகி வருகிறது என்று கூறியதுடன், மானியக் கோரிக்கையின்போது செங்கோட்டையன் விரும்பும் பதிலை கூறுகிறேன் என தெரிவித்தார்.
திமுக எம்எல்ஏ சுந்தர் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும்வது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், உத்திரமேரூர் தொகுதி வெண்குடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நிதி நிலைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளப்படும் என்றவர், பாலா ற்றின் குறுக்கே தடுப்பணை அவசியம் என்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் இந்த திட்டம் எடுத்துக் கொள்ளப்படும் என அவர் கூறினார்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரன் : சென்னையில் மக்கள் தொகை அதிகமுள்ள எழும்பூர் தாலுகாவை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர் தெரிவித்தார்.
“திருச்செங்கோடு தொகுதி – மல்ல சமுத்திரத்தை புதிய வட்டமாக உருவாக்க சாத்தியக்கூறு இல்லை. மல்ல சமுத்திரத்தை புதிய வட்டமாக உருவாக்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். திருச்செங்கோடு மலையடிவாரத்தில் 60 ஆண்டுகளாக வசித்து வரும் 2,000 குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் கூறினார்.
அமைச்சர் சிவசங்கர் : “3,000 புதிய பேருந்துகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. புதிய பேருந்து வந்த பிறகு வழித்தடங்கள் நீடிக்கப்பட்டு வருகிறது. கும்மிடிப்பூண்டி போக்குவரத்து பணிமனை அமைக்க திட்டக் கூறுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நிலஉரிமை வந்தபிறகு கட்டுமான பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி : “திருவண்ணாமலையில் 20 புதிய துணை மின் இணைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கலசப்பாக்கம் தொகுதியில் 2 துணை மின் நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. கீழ்பென்னாத்தூரில் 4 புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.” என சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் ரகுபதி :”தமிழ்நாட்டில் தற்போது 15 அரசு சட்டக்கல்லூரிகள் உள்ளன. அரசு சட்டக்கல்லூரிகளில் போதுமான அளவிற்கு மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. மடத்துக்குளத்தில் சட்டக்கல்லூரி அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை,
இவ்வாறு அமைச்சர்கள் பதில் தெரிவித்தனர்.