டில்லி
வரவு செலவு அறிக்கை கூட்டத் தொடரின் 2 ஆம் அமர்வு இன்று தொடங்குகிறது.
இந்த வருடத்துக்கான வரவு செலவு அறிக்கை கூட்டத் தொடர் 2 பகுதிகளாக நடைபெறுகிறது. இதன் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 29 முதல் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வரை நடந்தது. அந்த சமயத்தில் மத்திய மற்றும் ரெயில்வே வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்ப்பட்டது. அதன் பிறகு இரு அவைகளும் பிப்ரவரி 9 ஆம் தேதி ஒத்திவைக்கப்படது.
இந்த தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 6 ஆம் தேதிவரை நடக்க உள்ளது. ஆளூம் பாஜக அரசு இந்த அமர்வில் பொருளாதார குற்றங்கள் செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் நபர்களின் சொத்துக்களை முடக்க வழி செய்யும் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் சென்ற அமர்வில் நிறைவேற்றப்படாத முத்தலாக் உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என முனைப்பில் உள்ளது.
ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த அமர்வில் வைர வியாபாரி நிரவ் மோடியின் ஊழல் உட்பட பல பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன. தவிர முத்தலாக் தடை சட்டத்துக்கும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் உள்ளன. இதனால் இம்முறை பாராளுமன்ற அனல் பறக்கும் விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.