டெல்லி: மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஏழை மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை ரூ. 73ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்து உள்ளார். ஆனால், இந்த திட்டத்துக்கு சுமார் 98 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும் நிலையில், அதை குறைத்து ஒதுக்கீடு செய்து ஏழை மக்களின் வயிற்றில் அடித்துள்ளார். இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜிவாலா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் திட்டம் மக்களிடையே 100 நாள் வேலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்ததிட்டம், கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில் காங்கிரஸ் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின்படி, ஏழைமக்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த திட்டத்தில் 11 கோடி தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
கடந்த 2020ம் ஆண்டு கோவிட் லாக்டவுனின் போது, இந்தத் திட்டத்திற்கு இதுவரை இல்லாத அதன் அதிகபட்ச பட்ஜெட்டாக ரூ.1.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இது கடந்த 2021ம் ஆண்டு பட்ஜெட்டில் வெறும் ₹73,000 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. சமூக ஆர்வலர் களும், நிதி ஒதுக்கீடு குறைத்ததை கடுமையாக விமர்சித்தனர். இதனால் ஏழை மக்களுக்கு சரிவர வேலை கொடுக்க முடியாத நிலையும், வேலை செய்தவர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுதொடர்பான ஆய்வுகளின் படி, கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி நிலவரப்படி, இந்த திட்டத்தின்படி மொத்தச் செலவினம் ஏற்கனவே ₹79,810 கோடியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட ரூ.7 ஆயிரம் கோடி அதிகரித்திருந்தது. மேலும், ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், வேலை கோரிய 13% குடும்பங்களுக்கு இவ்வாண்டு பணி வழங்கப்படவில்லை என்றும் புள்ளி விவரங்கள் தெரிவித்தன. பல தொழிலாளர்கள் வேலையைக் கோரும் போது, அவர்களின் கோரிக்கை பதிவு செய்யப்படாமல், அதிகாரிகளால் வெறுமனே திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, இந்த பட்ஜெட்டிலாவது 100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி அமைச்சர் அதிக நிதி ஒதுக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டைப்போலவே ரூ..73ஆயிரம் கோடி ஒதுக்குவதாகவே அறிவித்துள்ளார். இதுவும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜிவாலா, மோடி அரசு மானியத்தை குறைத்து, ஏழைகளையும் விவசாயிகளின் வாழ்வதாரங்களை அழித்து வருகிறது என்று கூறியுள்ளார்.
100நாள் வேலை திட்டத்துக்கு குறைந்த பட்சம் ரூ.98ஆயிரம் கோடி தேவைப்படும் நிலையில், நிதியமைச்சர் ரூ.73ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கிடு செய்து, ஏழை மக்களின் வயிற்றில் அடித்துள்ளதற்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜிவாலா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மேலும், உணவு மானியம் ரூ. 2.86 லட்சம் கோடியிலிருந்து ரூ. 2.06 லட்சம் CR ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதுபோல உர மானியம் ரூ. 1.40 லட்சம் கோடியிலிருந்து ரூ. 1.05 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.