புதுடெல்லி:
பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு ப. சிதம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற காணொலி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, ப.சிதம்பரம், மணீஷ் திவாரி, மணிக்கம் தாகூர் மற்றும் கே.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம் தெரிவித்ததாவது:

கொரோனா பொதுமுடக்கம் இல்லாவிட்டாலும் நாட்டின் பொருளாதாரம் 2018-19 முதல் காலாண்டு முதல் அடுத்தடுத்த எட்டு காலாண்டுகளுக்குத் தொடர்ந்து சரிவையே சந்தித்திருக்கும். 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் -(மைனஸ்)23.9% மற்றும் இரண்டாம் காலாண்டில் -(மைனஸ்)7.5% ஆக வளர்ச்சி சரிந்துள்ளது. கடந்த நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்கும் பெருமை தற்போதைய நிதியமைச்சருக்கே உண்டு.

2020-21 நிதியாண்டின் இறுதிவரை எதிர்மறை வளர்ச்சியில்தான் பொருளாதாரம் இருக்கும். 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவர்ச்சிகரமான கதைகளை உருவாக்க முயற்சிப்பார். 2020-21 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் தவறான மதிப்பீடுகளாகவே இருக்கும்.

எனவே, பட்ஜெட்டுக்கு ஆலோசனையாக, பொருளாதாரத்தை சீர்படுத்த ஒரு பெரிய நிதித்தொகையை ஒதுக்க வேண்டும். மக்களிடம் பணம் புழங்கினால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்லும். இதற்காக, பொருளாதாரத்தில் பின்தங்கிய 20-30% குடும்பத்தினருக்கு ஆறு மாத காலத்திற்கு நேரடியாக நிதி வழங்க வேண்டும். ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விகிதங்களில் குறைப்பு, மூலதன செலவு அதிகரிப்பு, மூடப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களை மீட்டெடுத்தல் ஆகியவற்றின் மூலமாக பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்று தெரிவித்தார்.