கொழும்பு :
இலங்கையில் மூண்டுள்ள சிங்கள- இஸ்லாமிய மத்த்தினரிடையே மூண்டுள்ள மதக்கலவரத்தை முன்னாள் அதிபர் மகிந்த ராஜகபக்ஷே தூண்டி விடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இது குறித்து கொழும்பு செய்தியாளர்கள் சிலர் கூறும் கருத்து:
30 ஆண்டுகளுக்கு மேலாக வடகிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த விடுதலைப்புகள் மகிந்த ராஜபக்சே ஆட்சியில் அழிக்கப்பட்டனர். அதோடு லட்சக்கணக்கான பொது மக்களும் கொல்லப்பட்டனர். இதை இனப்படுகொலை என்று மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சிங்கள அரசபடை வென்றாலும், 2015ல் ராஜபக்சே ஆட்சி முடிவுக்கு வந்தது.
அடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த புதிய அதிபர் மைத்ரிபால சிரிசேனா – பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் நாட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்த முயன்றதோடு, பொருளாதாரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க முனைந்தனர். இன வெறுப்பை தணிக்க முயற்சித்தனர். (இவர்கள் மீதும் இனவெறுப்பைத் தூண்டியதாக ஏற்கெனவே விமர்சனங்கள் உண்டு.)
ஆனால் அவர்களின் மூன்று வருட முயற்சி வெற்றிபெறவில்லை. இதற்கு முக்கிய காரணமாக இந்த காலகட்டத்தில் சொல்லப்பட்டது சிங்கள – தமிழர் மோதல் அல்ல. சிங்கள – இஸ்லாமியர் மத மோதல்.
அவ்வப்போது இஸ்லாமியரின் மசூதி, கடைகள் சிங்களர்களால் தாக்கப்படுவது தொடர்ந்தது.
இந்த நிலையில் கண்டியில் சிங்கள இளைஞர் ஒருவரை இஸ்லாமிய இளைஞர்கள் கொன்றதாக விவகாரம் எழுந்தது. இதையடுத்து கண்டி – பல்லேகலை பகுதியில் கடும் வன்முறை ஏற்பட்டுள்ளது.
கொலை,சூறையாடல் தொடர்கிறது. 10 நாட்களுக்கு அவசர நிலைபிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது. ராணுவம் மற்றும் சிறப்பு படைகள் கண்டி பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கண்ட ராஜபக்சேவின் கட்சியினர் இது போன்ற தீவிரவாத செயல்களைத் தூண்டுகிறார்கள்.
அதிபர் சிறிசேனா – ரணில் விக்ரமசிங்கே கூட்டணி மீதான மக்களின் நம்பகத்தன்மையை உடைப்பதே ராஜபக்சேவின் லட்சியம். இதன் மூலம் 2020ம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றலாம் என்பது அவரது திட்டம்.
மத மோதலோ, இனக்கலவரமோ அதற்கு ராஜபக்சே அஞ்சுபவர் அல்ல. அவரது ஆட்சி காலமே அதற்கு உதாரணம். தமிழ், இஸ்லாமிய மக்கள் என்றில்லை. தன்னை எதிர்க்கும் சிங்களர்களைக்கூட அழித்தொழிப்பதில் தீவிரமாக இருந்தவர் ராஜபக்சே.
தவிர, அவரது கட்சியினர் சிங்கள தீவிர சிந்தனை கொண்டவர்கள். இதுபோன்ற வன்முறை சூழலுக்காக அவர்கள் காத்திருந்தார்கள். தற்போது அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்” என்பது கொழும்பில் உள்ள செய்தியாளர்கள் கருத்தாக இருக்கிறது.