லக்னோ: ராஜஸ்தானில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் அம்மாநில அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த குழப்பங்கள் ஒரு பக்கம் இருக்க, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி, ராஜஸ்தானில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலோட் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்களை காங்கிரசில் சேர்த்ததன் மூலம் 2வது முறையாக எங்களை ஏமாற்றியுள்ளார். அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட காரியத்தை அசோக் கெலாட் செய்துள்ளார்.
எனவே ராஜஸ்தானில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையை கருத்தில் கொண்டு, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அப்போது தான் ஜனநாயகம் காக்கப்படும் என்று கூறினார்.