லக்னோ: நாடாளுமன்ற தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் தேர்தல் தொடர்பான இதர முக்கிய விஷயங்கள் குறித்து, கட்சித் தலைவர் மாயாவதி கலந்துகொண்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மாயாவதியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட மற்றும் பிராந்திய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், சமாஜ்வாதி கட்சித் தலைமையுடன் கலந்து ஆலோசிக்கப்பட்ட பிறகு, நடைமுறைக்கு வருமென கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி வட்டாரங்களில் கூறப்படுவதாவது; பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி தலைவர்களின் செயல்பாடுகள் மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் ராஷ்ட்ரிய லோக்தள் ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் ஒருங்கிணைந்து, தேர்தல் மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.
கூட்டணியின் வெற்றிக்காக, வேற்றுமைகளை மறந்து பணியாற்ற வேண்டுமென கட்சியின் சார்பாக, தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டணி, உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு நல்ல மாற்றாக உருவாகியுள்ளது.
தேர்தலில் வெற்றிபெற, பாரதீய ஜனதா அனைத்துவிதமான தில்லுமுல்லு வேலைகளிலும் ஈடுபடும் என்பதால், தொண்டர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி