சென்னை,

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இருந்து  மாறன் சகோதரர்களை விடுவிக்கக்கூடாது என சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த காங்கிரஸ் தலைமையிலான  ஆட்சியின்போது திமுக சார்பாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக  தயாநிதி மாறன் இருந்தார். அப்போது, பி.எஸ்.என்.எல் இணைப்பை முறைகேடாக தனது அண்ணனின் சன்டிவி நிறுவனத்துக்கு  பயன்படுத்திய தாகவும், இதனால் அரசுக்கு 1.78 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு, சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் ஒவ்வொரு விசாரணையின்போதும் வெவ்வெறு காரணங்கள் கூறி வழக்கு  இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ந்தேதேதி  சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதையடுத்து கடந்த ஜூன் மாதம்  6ந்தேதி நடைபெற்ற  விசாரணையின்போது  சுமார் 2500 பக்கம் உள்ள குற்றப்பத்திரிகையின் நகல்  மாறன் சகோதரர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் 7 பேரிடமும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், விசாரணை இழுத்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது.

முதலில் ஆவனங்களை படிக்க அவகாசம் தேவை என்று கூறப்பட்டது. பின்னர் கடந்த கடந்த 3ந்தேதி நடைபெற்ற விசாரண யின்போது  வழக்கில் இருந்தே தங்களை விடுவிக்க வேண்டும் என்று மாறன் சகோதரர்கள் தரப்பில் இருந்து புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 23ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். ஆனால், அப்போது, சிபிஐ தரப்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டது. அதைத்தொடர்ந்து விசாரணையை நவம்பர் 10 ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்

இந்நிலையில்,  இந்த வழக்கு இன்று மீண்டும்  சிபிஐ வழக்குகளுக்கான சென்னை 14-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, தயாநிதி மாறனின் சிறப்பு தனிச்செயலாளர் கவுதமன், சன் டிவி தலைமை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், சன் டிவி எலக்ட்ரீசியன் ரவி ஆகிய மூவர் மட்டும் ஆஜரானார்கள். மற்றவர்கள் ஆஜராகாமல் இருப்பதற்கு விலக்கு கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து சிபிஐ தரப்பில், வழக்கு குறித்த் பதில் மனுவும், கூடுதல் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யாரையும் விடுவிக்கக்கூடாது என வாதிடப்பட்டது. மேலும்,  புகார்கள் முறையாக விசாரிக்கப்பட்டே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகவும், எவரையும் வழக்கிலிருந்து விடுவிக்க கூடாது என்றும், விடுவிக்கக் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாறன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  சிபிஐ தாக்கல் செய்துள்ள  கூடுதல் ஆவணங்களை ஆய்வு செய்து விளக்கமளிக்க மூன்று வார கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, பின்னர் 10 நாட்கள் அவகாசம் வழங்குவதாக கூறி வழக்கை வரும் 21ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.