டில்லி
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு 4000 மொபைல் கோபுரங்களை குத்தகைக்கு அளிக்க பி எஸ் என் எல் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள 22 பகுதிகளிலும் சேவை அளிக்க ஒருங்கிணைந்த உரிமம் பெற்ற ஒரே தொலை தொடர்பு நிறுவனம் ரிலியன்ஸ் ஜியோ நிறுவனம் ஆகும். இதன் மூலம் நாடெங்கும் தொலைபேசி, இணையம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இந்நிறுவனம் அளிக்க முடியும். இந்நிறுவனம் தனது 4 ஜி சேவைக்காக பான்-இந்தியா ஒயர்லெஸ் ஸ்பெக்டிரம் பயன்படுத்தி வருகிறது.
இதைத் தவிர நாடெங்கும் உள்ள பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வியோம் நெட் ஒர்க், அமெரிக்கன் டவர் மற்றும் அசெண்ட் டெலிகாம் ஆகிய நிறுவன மொபைல் கோபுரங்களை கட்டணம் செலுத்தி பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜியோ தனது சேவையை நாடெங்கும் தொடர மேலும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதில் ஒன்றாக அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் இடம் இருந்து 4000 மொபைல் கோபுரங்களை குத்தகைக்கு எடுக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தப்படி பி எஸ் என் எல் தனக்கு சொந்தமான கோபுரங்களில் நிலத்தில் அமைக்கபட்டுள்ள கோபுரம் ஒன்றுக்கு மாதம் ரூ. 38000 வசூலிக்க உள்ளது. மாடியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம் ஒன்றுக்கு ரூ.24900 வசூலிக்க உள்ளது, ஜியோ நிறுவனம் முதல் வருடத்தில் குறைந்தது 1500 கோபுரங்களை குத்தகைக்கு எடுத்தால் இந்த கட்டணத்தில் கழிவு அளிக்க பி எஸ் என் எல் ஒப்புக் கொண்டுள்ளது.
இது குறித்து பி எஸ் என் எல் இயக்குனர் அனுபம் ஸ்ரீவத்சா, “ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதல் வருடம் குறைந்தது 1500 கோபுரங்கள் குத்தகைக்கு எடுத்தால் நிலத்தில் உள்ள கோபுரம் ஒன்றுக்கு மாதம் ரூ.35000 எனவும் மாடியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம் ஒன்றுக்கு ரூ. 21000 மாதக் கட்டணமும் வசூலிக்கப்படும். இதைத் தவிர மூன்று மாதங்களுக்குள் 1000 கோபுரம் குத்தகைக்கு எடுத்தால் 5% சிறப்பு கழிவு அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.