மும்பை

பிஎஸ்என்எல் நிறுவனம் 1,000 mbps  பதிவிறக்க வேகத்துடன் கூடிய அதிவேக இணைய தள   சேவையை  அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அனைத்து தொலைபேசி / இணைய இணைப்பு நிறுவனங்களும் பற்பல சேவைகளை தினமும் அறிமுகப் படுத்தி வருகிறது.   தற்போது அரசு நிறுவனமான பி எஸ் என் எல் 1000 mbps வேகத்தில் இணைய தள  வசதியை அளிக்கும் புதிய திட்டம் ஒன்றை துவங்கியுள்ளது.   மும்பையில்  மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா இந்த சேவையை தொடக்கிவைத்தார்.  மாநில தலைநகரங்கள் உள்ளிட்ட 100 நகரங்களில் நடப்பு நிதியாண்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.  330 கோடி ரூபாய் செலவில் 3 கட்டங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிஎஸ்என்எல் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு இதற்கு முன்னதாக  பிபி249 என்ற மின்னல் வேக பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது.  பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் 75 பைசாவில் 1 ஜிபி அளவிலான டேட்டாவை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ வாடிக்கையாளர்களை பி எஸ் என் எல்லுக்கு இழுக்க பல புதிய திட்டங்களை பிஎஸ்என்எல் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.