பெங்களூரு:
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தேசத்துரோகிகள், அந்நிறுவனத்தின் சேவை நாட்டுக்கே களங்கம் என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி. பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி. அனந்த குமார் ஹெக்டே எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர்போனவராவார். அந்த வகையில் அவர் சமீபத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய போது, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ஐ கடுமையாக விமர்சித்தார். எந்த ஊரிலும் பி.எஸ்.என்.எல். நெட்ஒர்க் கிடைக்கவில்லை என்பது அனந்தகுமாரின் குற்றச்சாட்டு.
மத்திய அரசால் தீர்க்க முடியாத அளவுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் களங்கம் இருப்பதாகவும், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்றும் அனந்தகுமார் ஹெக்டே வசைபாடியுள்ளார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தேவையான கட்டமைப்புகள் உள்ளது. ஆனால் அங்குள்ளவர்கள் பணி செய்வதில்லை. மேக் இன் இந்தியா திட்டத்தில் பிரதமர் பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளார். ஆனாலும் அவர்கள் வேலை செய்ய தயாராக இல்லை என அனந்த குமார் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 85 ஆயிரம் ஊழியர்களை மத்திய அரசு பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும், வரும் நாட்களில் மேலும் பலர் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அனந்த குமார் ஹெக்டே கூறியுள்ளார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை சீர்படுத்த தனியார் மையம் ஒன்றே தீர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார்