திருச்சி: தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு, மத்திய அரசு எளிய கடன்களை(soft loans) வழங்குவதன் மூலமாக நிவாரணம் செய்ய முடியும் என்று அந்நிறுவனத்தின் ஊழியர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்றும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்குகூட நிதியில்லாத நிலை உள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் ஜியோ போன்ற தனியார் நிறுவனங்களுக்கு அரசால் தாரை வார்க்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சிவகுமார் கூறியதாவது, “பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்காக திட்டமிட்ட பொய்யான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
பல தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் கடன்களை ஒப்பிடும்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடன்தொகை குறைவே. மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எளிய கடன்களை வழங்குவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்.
மேலும், மத்திய தகவல்தொடர்பு துறை, இந்நிறுவனத்திற்கு உடனடியாக 4ஜி அலைவரிசையை வழங்க வேண்டும். இதனோடு, நாடு முழுவதும் அச்சேவையை வழங்குவதற்கான உள்கட்டமைப்பையும் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.