கோலாலம்பூர்:

ஓரினச் சேர்க்கை மற்றும் விபச்சார குற்றங்களை செய்தால், புருனேவில் கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றும் சட்டம் விரைவில் அமலாகிறது.


ஏற்கெனவே, ஓரின சேர்க்கைக்கு புருனே தடை விதித்துள்ளது. இந்நிலையில் இத்தகைய குற்றங்கள் செய்தால், கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டே நிறைவேற்ற புருனே நடவடிக்கை எடுத்தது. ஆனால் மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து புருனே மத விவகாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “இது தொடர்பான அறிவிப்பை சுல்தான் ஹசானல் போக்கியா ஏப்ரல் 3-ம் தேதி வெளியிடுவார்.

அதன்பிறகுதான், கல்லால் அடித்து மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யும் ஷரியா சட்டத்தை எந்த தேதியிலிருந்து அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்படும்” என்றனர்.

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த பில் ராபர்ட்சன், “இத்தகை நடவடிக்கையால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சர்வதேச ஏஜென்ஸிகள் விலகிப் போகும் சூழல் ஏற்படும்.

தென்கிழக்கு ஆசியாவில் ஓரின சேர்க்கைக்கு தண்டனை கொடுக்கும் ஒரே நாடு என்ற அவப்பெயர் புருனேவுக்கு ஏற்படும்” என்று எச்சரித்தார்.