கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திலிருந்து புருனே நாட்டு முஸ்லீம் அரசாங்கம் பின்வாங்கியுள்ளது.

சர்வதேச சமூகத்திலிருந்து வந்த தொடர்ந்த அழுத்தங்கள் காரணமாகவே இந்த முடிவை, புருனே அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டு ஆட்சியாளர் சுல்தான் ஹசானல் போல்கியா, ஓரினச் சேர்க்கை குற்றத்திற்கான மரண தண்டனை அறிவிப்பை நிறுத்திவைப்பதாகவும், சித்ரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தை அமலுக்கு கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஷரியா சட்டத்தை முதன்முதலாக அமல்படுத்திய கிழக்காசிய நாடு என்ற பெயரைப் பெற்ற புருனே, விபச்சாரம், கற்பழிப்பு மற்றும் ஓரினச் சேர்க்கை ஆகிய குற்றங்களுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் மரண தண்டனையை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.