கமதாபாத்

ணப்பிரச்சினையால் கடன் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இரு சகோதரர்கள் தங்கள் நான்கு குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

அகமதாபாத் நகரில் உள்ள சகோதரர்களான அம்ரீஷ் படேல் (வயது 42) மற்றும் கவுரங் படேல் (வயது 40) ஆகிய சகோதரர்கள் வசித்து வந்தனர்.  கடந்த 17 ஆம் தேதி அவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளான சால்வி (வயது 7),  கீர்த்தி (வயது9), மயூர் மற்றும் துருவ்(வயது 12) ஆகியோருடன் வெளியே செல்வதாக மனைவியரிடம் சொல்லி விட்டுச் சென்றனர்.  அடுத்த நாள் மாலை வரை அவர்கள் திரும்பவில்லை.

இதையொட்டி அவர்களைத் தேடியபோது சந்தேகத்தின் பேரில் அவர்களுக்குச் சொந்தமான வாட்வா பகுதியில் காலியாக உள்ள பிளாட்டுக்கு  சென்று பார்த்துள்ளனர்.  அது உள்ளே பூட்டப்பட்டு இருந்தது.  இதையொட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்த போது அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.  அங்கு ஆறு பேரும் பிணமாகத் தூக்கில் தொங்கி உள்ளனர்

பிரேதப் பரிசோதனையில்  குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அதன் பிறகு தூக்கில் தொங்க விடப்பட்டது தெரிய வந்தது.   காவல்துறையினர் இந்த தற்கொலை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.  அப்போது இந்த சகோதரர்கள் பணப்பிரச்சினையில் சிக்கி உள்ளதும் ஏராளமான கடன் சுமை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து அகமதாபாத் காவல்துறை ஆணையர் ராணா, “விசாரணையில் இந்த இரு சகோதரர்களும் ஒரே குடும்பமாக வசித்து வருவதும் இவர்களுக்கு ரூ.32 லட்சம் கடன் உள்ளதும் தெரிய வந்தது  இந்த கடனை இவர்கள் ஊரடங்குக்கு முன்பு வாங்கி உள்ளனர்.  தற்போது ஊரடங்கால் வருமானம் இல்லாததால் இவர்களால் கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் போய் உள்ளது.

இதைத் தவிர இவர்களிடம் 26 கடன் அட்டைகள் இருந்துள்ளன.  இவற்றுக்கு ரூ. 12 லட்சம் வரை பாக்கி உள்ளது.  தற்போது வருமானம் முழுமையாக இல்லாத நிலையில் பணச் சிக்கல் உண்டாகி உள்ளதால் சகோதரர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  அம்ரீஷிடம் இருந்த 14 கடன் கணக்கில் இதுவரை 3 மட்டுமே அடைக்கப்பட்டுள்ளது.   கவுரங் தர வேண்டிய கடனில் முழுவதும் கடன் அட்டை கடன்களாகும்.

சகோதரர்கள் இருவரும் ஒற்றுமையாக வரும் வருமானத்தைச் சரி சமமாகப் பங்கிட்டு வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கு அதிகம் நண்பர்கள் இல்லை.   குடும்பத்தினருடன் மட்டும் விடுமுறை சுற்றுலா சென்று வந்துள்ளனர்.   சகோதரர்கள் இருவரும் மனைவிகள் பெயரில் கடன் வாங்கி இருந்தாலும் அது குறித்து வீட்டுப் பெண்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.  இவர்களுக்குச் சொந்தமான வீட்டு முகவரியைக் கடன் வாங்கியவர்களுக்குக் கொடுத்ததால் அந்த வீட்டை காலி செய்து விட்டு வாடாகி வீட்டுக்குக் குடி வந்துள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.