டில்லி

சென்ற வாரம் காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன் 32 ரக விமான பாகங்கள் அருணாசலப் பிரதேசத்தில் கிடைந்துள்ளன.

கடந்த 3 ஆம் தேதி அன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான ரஷ்ய தயாரிப்பான ஏஎன் 32 ரக சரக்கு விமானம் அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்கத் என்னும் இடத்தில் இருந்து புறப்ப்ட்டு சென்றது. இந்த விமானத்தில் அப்போது 8 பேர் பயணம் செய்துக் கொண்டு இருந்தனர். அவர்களில் 6 பேர் ராணுவத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த விமானம் நடு வானில் பறந்துக் கொண்டிருந்த போது திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் கடும் பதட்டம் ஏற்பட்டது. விமானத்தை தேடும் பணி தொடங்கியது. ஆனால் இந்த விமானம் கண்டுபிடிக்கப் படவில்லை. இதனால் இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம் என ஊகம் எழுந்த்து.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களும் ஹெலிகாப்டர்களும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கின.  அந்தப் பகுதியில் நிலவிய மோசமான வானிலை, அடர்த்தியான வனப்பகுதிகள், மலைகள் ஆகியவைகளால் தேடுதல் பணி மிகவும் தாமதம் ஆனது.

அதனால் இஸ்ரோவின் செயற்கைக் கோள் மூலமும் தேடும் பணி நடந்தது. இந்த விமானம் தொட்ர்பை இழந்த அருணாசலப் பிரதேசத்தின் லிபோ பகுதியில் தேடுதல் மேலும் தீவிரமாக்கப்பட்டது.

நேற்று இந்திய விமானப்படையில் எம் ஐ 17 ரக ஹெலிகாப்டர் மூலம் தேடும் போது ஒரு பகுதியில் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடப்பது கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. இதன் மூலம் விபத்து நடந்தது நிரூபணம் ஆகி உள்ளது. அதில் பயணம் செய்தவர்கள் நிலை குறித்து ஏதும் தெரியவில்லை. இன்று அந்த பகுதியில் மீட்புப் படையினர் இறங்கி தேட உள்ளனர்.