பிரிட்டன் மற்றும் சீனா இடையிலான உறவில் பொற்காலம் முடிந்துவிட்டதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
சீனாவின் எதேச்சதிகார அதிகரித்து வருவது இங்கிலாந்தின் மதிற்பிற்கும் நலனுக்கு சவாலாக அமைந்துள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பிரதமராக பொறுப்பேற்றபின் வெளியுறவு குறித்து முதல் முறையாக பேசியுள்ள சுனக் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஒத்த எண்ணம் கொண்ட உலகளாவிய நட்பு நாடுகளுடன் பிரிட்டன் தனது உறவை பலப்படுத்திக் கொள்ள விரும்புவதாக கூறினார்.
லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் லார்ட் மேயர் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரிஷி சுனக் அயல்நாடுகளுடனான உறவு குறித்து பேசும் போது இவ்வாறு தெரிவித்தார், இருந்தபோதும் சீனாவை ஒரு அச்சுறுத்தலாக குறிப்பிடவில்லை, மாறாக சீனா தனது அதிகார வரம்பை விரிவு படுத்தி வருவது குறித்து மட்டும் கருத்து கூறினார்.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக பெய்ஜிங் மற்றும் சீனாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற போராட்டம் குறித்து பேசிய சுனக், தனது நாட்டு மக்களின் குரலை ஒடுக்கும் முயற்சியில் சீனா இறங்கி இருப்பதற்கும் பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தார்.